Saturday, 19 April 2014

26/11 கொடுமையும் இந்திய-இஸ்ரேல் நட்புறவும்

கடந்த 2008 நவம்பர் 26 அன்று மும்பை நகரில் பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் 200க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டனர். அதில் காவல்துறை கைது செய்த கசாப் இன்றும் மும்பை சிறையில் சகல வசதிகளுடன் இருந்து பின் தூக்கிலிடப்பட்டான். தீவிரவாதிகள் தாக்குதலுக்குத் தேர்வு செய்த இடங்கள் வணிக முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள். மத இன பேதமற்று அனைத்து மக்களும் அதிகம் கூடும் இடங்கள். ஒரு தொடர்வண்டி நிலையம், ஒரு தேநீர் விடுதி, இரண்டு நட்சத்திர விடுதிகள், ஒரு யூத சமூக மையம் ஆகிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாயின.


ஆறாண்டுகள் கடந்த பிறகு இத்தகைய தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக என்ன சாதித்தோம் என்று பார்த்தால், ஒன்றுமே இல்லை. நம் மக்களை கண்மூடித்தனமாகச் சுட்ட கசாப் இன்று சிறையில் சகலவசதிகளுடன் வாழ்கிறான்.அவன் நம்பும் ஷரியா சட்டப்படி முச்சந்தியில் நிற்க வைத்து சல்லடையாகத் துளைக்கப்பட வேண்டியவன். பிரியாணி வேண்டும், வாசனைத்திரவியங்கள் வேண்டும் என்று அவன் கேட்பதெல்லாம் தரப்படுகிறது. துணைக்குப் பெண் வேண்டும் என்று அவன் கேட்டதாக இது வரை தகவல் இல்லை.

இதே தாக்குதல் அமெரிக்காவில் நடந்திருந்தால் தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் பாகிஸ்தான் மீது படை எடுத்திருப்பார்கள். ஐநா சபையில் தீர்மானம் போட்டு ஒரு வழி செய்திருப்பார்கள். நம் அரசு பாகிஸ்தானிடம் உங்கள் நாட்டில் இருந்து தான் இது நடந்தது. தயவு செய்து நடவடிக்கை எடுங்கள் என்று வழக்கம் போல கெஞ்சிக் கூத்தாடி ஆதாரங்களைக் கொடுத்தது. அதிலும் சில குளறுபடிகள் செய்து தன் கையாலாகாத்தனத்தை மேலும் உறுதி செய்தது.

பாகிஸ்தான் அரசோ அப்படி எதுவும் இல்லை. எங்கள் நாட்டு ஜிகாதிகள் யோக்கிய சிகாமணிகள் என்று வழக்கம் போல பேசுகிறது. நமது வெளியுறவுத்துறை அமைச்சர் மறதி மன்னார்சாமி S.M.கிருஷ்ணா ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இது கொஞ்சம் கூட சரியில்லை என்று சொல்லியிருக்கிறார். இது போதாதா... தவறைக் கண்டித்துவிட்டால் முடிந்தது விஷயம். அடுத்த தாக்குதல் நடந்தால் மீண்டும் கண்டிப்போம். ஒரு நாள் தீவிரவாதம் நிற்காமலா போய்விடும்?

சரி இருக்கட்டும்... சம்பவம் நடந்ததும் பெரிய அளவில் அதிகாரிகளும் அமைச்சர்களும் மாற்றப்பட்டனர் என்று மகிழ்ந்தோமே. அது என்னவாயிற்று? கையாலாகாதவர் என்று மாற்றப்பட்ட சிவராஜ் பாட்டீல் இன்று பஞ்சாப் ஆளுநர். காலிஸ்தான் மீண்டும் தலையெடுப்பதாக செய்திகள் வருகின்றன. மஹாராஷ்டிராவின் துணைமுதல்வர் ஆர்.ஆர்.பாட்டீல் சரத்பவாரால் நீக்கப்பட்டார். இதுகண்டு சோனியாவும் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கை நீக்கினார். ஓராண்டுக்குப் பின்  விலாஸ்ராவ் மத்திய அமைச்சர் ஆனார். ஆர்.ஆர்.பாட்டீல் மீண்டும் உள்துறை பொறுப்போடு துணைமுதல்வர் ஆனார்.

சரி அரசியல்வாதிகள் அப்படித்தான் விளங்காத்தனமாக இருப்பார்கள்.  அதிகாரிகள் மீது நடவடிக்கை என்ன ஆனது? சரியாக காவல்துறையை வழிநடத்தவில்லை என்று ராம் பிரதான் விசாரணைக் குழுவால் குற்றம் சாட்டப்பட்ட மும்பையின் அப்போதைய காவல்துறை ஆணையர் ஹசன் கஃபூர் லஞ்ச ஒழிப்புத்துறையின் துணை இயக்குனராகி ஓய்வு பெற்றுவிட்டார். உள்துறை அதிகாரிகள் சிலர் மீது கடமை தவறியதாக குற்றம் சாட்டியது விசாரணைக் குழு. ஆனால் அவர்கள் ஓய்வு பெற்ற பிறகும் செழிப்பான பதவிகளில் இருக்கின்றனர். அடப் பதர்களே! நீங்கள் திருந்தவே மாட்டீர்களா?

சம்பவத்தில் மாண்ட மக்களுக்கு நம் அரசு என்ன நியாயம் வழங்கும்? "கசாப்ஜி மும்பையைச் சுற்றிப்பார்க்க கடல் மார்க்கமாக வந்தார். அந்த நேரத்தில் மும்பை மக்கள் தங்களைத் தாங்களே சுட்டுக் கொண்டு செத்துப் போனார்கள். இதை இந்துத்வா சக்திகள் இசுலாமியத் தீவிரவாதம் என்று சித்தரித்து விட்டனர்", என்று திக்விஜய்சிங் மதசார்பற்ற கருத்துத் தெரிவித்தாலும் ஆச்சரியமில்லை. இஸ்ரேல் 26/11 தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறது. இதற்காக இந்தியாவுக்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்யத் தயார் என்கிறது. ஏன்? சம்பவத்தில் இறந்த இஸ்ரேலியர்களுக்கு நியாயம் வேண்டும் என்பதற்காக.

இஸ்ரேல் உதவிக்கு வருவது இங்கே பலருக்கு எரிகிறது. அரபு நாடுகளின் நட்பை இழக்கவேண்டி வரும் என்கிறார்கள். அரபு நாடுகள் அனைத்தும் 1947 முதல் இன்று வரை பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே இருந்து வந்துள்ளன. நாம் தான் விழுந்து விழுந்து அவர்கள் மனம் புண்படக்கூடாது என்று மெனக்கெடுகிறோம். அரபு நாடுகளில் ஒன்றாவது நம் மனம் புண்படுவது பற்றியோ நம் மக்கள் சாவது பற்றியோ கவலை கொள்வது கிடையாது. நாம் ஏன் அவர்கள் மனம் நோவது பற்றிக் கவலைப்படவேண்டும்?

இசுலாமிய நாடு என்ற போர்வையிலேயே அவை 1947 முதல் பாகிஸ்தானை ஆதரித்து வந்தன. ஆனால் நாம் அரபு நாடுகளை குஷிப்படுத்த அவர்களுக்கு மட்டுமே சாதகமாக, மனசாட்சிக்கு விரோதமாக, மானங்கெட்டத்தனமாக நேரு வம்சத்தால் நடத்தப்பட்டுக் கொண்டிருந்தோம். நாம் 1992க்குப் பின் இஸ்ரேலோடு நெருங்க ஆரம்பித்தோம். இந்த நெருக்கம் 2000க்குப் பிறகு மேலும் வலுப்பெற்றது. 2003ல் இந்தியா வந்த எகிப்தியக் குழுவில் இடம் பெற்ற எகிப்திய பாராளுமன்ற வெளியுறவுக் குழுத் தலைவர் முஸ்தபா எல் ஃபெகி இந்திய-இஸ்ரேல் நெருங்கிய நட்புறவுக்கு அரபு நாடுகள் இந்தியாவை அவமதித்ததே காரணம் என்கிறார்.

இசுலாமியப் போர்வையில் பாகிஸ்தானை ஆதரித்து இந்தியாவை அவமதித்தது அரபு நாடுகள் செய்த தவறு என்று 2005ல் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார் முஸ்தபா. OIC உறுப்பினர் பிரச்சினையில் இருந்து பல விஷயங்களில் அரபு நாடுகள் இந்தியாவை அவமதித்ததை அவர் எடுத்துக்காட்டியுள்ளார். இந்தியா மொத்தமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக மாறிவிடவில்லை, ஆதலால் இந்தியாவை மதித்து மீண்டும் தம் பக்கம் சேர்க்க அரபு நாடுகள் ஆவன செய்யவேண்டும் என்பதாக அவர் கருத்து இருக்கிறது.

ஆக அரபு நாடுகள் தம் தவறை உணர்ந்து கொண்டாலும் இங்கே சில மூளைச்சலவை வித்தகர்கள் இஸ்ரேல் என்றாலே நெருப்பை மிதித்தது போல அலறுவதும், இஸ்ரேல் ஆதரவு என்பது தேசத்துரோகம் என்பது போலவும் பேசுவது அபத்தத்தின் உச்சம். இறந்தகாலத்தில் வாழப் பழக்கும் கம்யூனிச அவலம். இஸ்ரேல் என்றாலே அந்தக் கும்பலுக்குப் பொத்துக் கொண்டு வருகிறது. முற்போக்கு முத்திரையில் இன்று நாட்டில் நடமாடும் இவர்கள் ஒரு காலத்தில் ரூபிளிலும், இப்போது ரென்மின்பியிலும் கூலி பெற்றுக் கொண்டு கூத்தாடுபவர்கள்.  அவர்களுக்கு அவர்கள் சொல்வதெல்லாமே முற்போக்கு அவர்களுக்கு எதிரான கருத்துக்கள் எல்லாமே பிற்போக்கு. அந்தக் கவைக்குதவாத கருத்துக்கள் நமக்குத் தேவையில்லை.

பாரத அரசு இஸ்ரேலின் உதவியை ஏற்க வேண்டும். சுற்றிலும் எதிரிகளால் சூழப்பட்ட நாடு இஸ்ரேல். ஆனாலும் யாராலும் இஸ்ரேலை அசைக்க முடியவில்லை. தன் பாதுகாப்பைத் தானே உறுதிசெய்து கொண்டு நெஞ்சு நிமிர்த்தி உலக அரங்கில் நடை போடுகிறது இஸ்ரேல். எண்ணை வளம், பண பலம், ஆள் பலம் என்று சகலமும் கொண்ட அரபு நாடுகள் பொருமத்தான் முடிந்தது. அமெரிக்காவில் வாலாட்டிய பின்லேடன் கூட இஸ்ரேலிடம் வாலாட்டவில்லை. பொத்திக்கொண்டு இருந்து விட்டான்.

அதுவல்லவா வல்லரசு!

நாமும் எதிரிகளால் சூழப்பட்டுள்ளோம். பாகிஸ்தான், சீனா, இலங்கை, பாகிஸ்தானில் சீனா, இலங்கையில் சீனா, வக்கற்ற வங்கதேசம் கூட அவ்வப்போது வாலாட்டுகிறது. நாம் எதுவும் செய்யமாட்டோம் என்ற தெனாவட்டு இவைகளுக்கு. இஸ்ரேலியர்களுடைய தீவிரவாத எதிர்ப்பு அனுபவத்தில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு நம்நாட்டைப் பாதுகாக்க இது ஒரு நல்ல சந்தர்ப்பம். ஆக பாரத - இஸ்ரேலிய கூட்டுச் செயல்பாடு மிகவும் அவசியமாகிறது. அதற்கு ஒரு சுயமாகச் செயல்படும் அரசு தேவைப்படுகிறது. 2014 தீர்ப்பு சரியானதாக அமையும் என்று நம்புவோம்.

வாழிய பாரத மணித்திருநாடு! வந்தே மாதரம்!!

No comments:

Post a Comment