Tuesday 15 April 2014

மோடி விளையாட்டும் குஜராத் வெற்றியும்

 2012 குஜராத் சட்ட மன்றத் தேர்தலில் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும் வெற்றி பெற்ற போது எழுதப்பட்ட கட்டுரை. கட்டுரையாளர் அருண்பிரபு.
__________________________________________________________________________________

குஜராத் குஷிமிகுந்து காணப்படுகிறது. மோடி, மஸ்தான்களுக்கு ஆகாதவர், அதனால் அவர் தோற்கவண்டும் என்ற ஆசைகள், பொதுக்கருத்து உருவாக்க முயற்சிகள், உள்குத்து வேலைகள் எல்லாம் பொய்த்துப் போய் கையறு நிலையில் கவலைக்கிடமாகி நிற்க, ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை என்ற கவிவாக்குப் படி மோடி மேன்மை மிக்க வெற்றியைப் பெற்றிருக்கிறார். 


 
மோடி எதிர்ப்பாளர்கள் யாரும் கடந்த 10 ஆண்டுகளாக வளரவே இல்லை என்பது தெளிவாகிறது. 2002லேயே இருக்கிறார்கள். குஜராத் வளர்ந்து கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணம் மோடிஜி கண்டு வரும் தொடர் வெற்றிகள். 2012ல் வெல்லமாட்டார். கேசுபாய் பிரித்துவிடுவார், ஆட்சிக்கு எதிரான மனோபாவம் என்றெல்லாம் பேசியவர்கள் இப்போது ஏசி நீல்சன் 120 தொகுதிகளில் வெற்றி என்றார்கள். இன்னபிற கணிப்புகள் 118 முதல் 120 என்றன. ஆனால் 115 தான் வந்தது என்று சமாதானம் சொல்லிக் கொள்கின்றனர்.போற்றுவார் போற்றட்டும் புழுதிவாரித் தூற்றுவார் தூற்றட்டும், வெற்றி என்றும் வளர்ச்சி தரும் மோடி அவர்களுக்கே.


வரலாறு காணாத 71.30% வாக்குப் பதிவு (2007ல் 59% தான்) என்றதும் சில புள்ளியியல் மற்றும் ஆய்வு நிபுணர்கள் ஒரு கருத்தைச் சொன்னார்கள். புறநகர் மற்றும் கிராமப்புற வாக்காளர்கள் மத்தியில் மோடிக்கு ஆதரவில்ல. அவர்கள் அதிக அளவில் வாக்களிக்கிறார்கள். ஆகவே வாக்குப்பதிவு சதவிகிதம் அதிகமாக அதிகமாக ஆளும் கட்சிக்கு ஆபத்து என்றனர். இதுவரை நாட்டில் நடந்து முடிந்துள்ள எல்லாத் தேர்தல்களிலும் அப்படித்தான் இருந்துள்ளது. ஆகவே மோடி கரையேறினாலும் பாஜக முங்கிவிடும் என்றனர்.


போதாக்குறைக்கு சில உள்குத்துக்கள் வேறு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதாதளம் இத்தேர்தலில் தனித்து வேட்பாளர்களை நிறுத்தியது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தன் மதசார்பற்ற அடையாளத்தை இழக்க விரும்பாத காரணத்தால் மோடியைத் திட்டுவோர் சங்கத்தின் தீவிர பிரச்சாரகராக இருக்கிறார். மோடி பிரதமராக வர இயலாத நிலை ஏற்பட்டால் பொருளாதார வளர்ச்சியும் ஆளுமைத் திறமும்  சார்ந்த மற்றொரு தலைவர் என்கிற போர்வையில் தான் பிரதமராக வாய்ப்புள்ளது என்பதால் நிதிஷ் குமார் எப்போதும் மோடியை மட்டம் தட்டியே தன் மதசார்பின்மை மேட்டிமையைப் பாதுகாத்து வருகிறார்.


கேசுபாய் படேல் என்றொரு பெரியவர். செயலில் இருந்த காலத்தில் குஜராத் பாஜகவின் மிகப் பெரிய தலைவராக கட்சியை கட்டிக்காத்த கோமகன். சங்கத்தில் செல்வாக்குப் பெற்றவர். குஜராத்தில் காங்கிரசுக்கு எதிராக ஒரு காலத்தில் கர்ஜித்த சிங்கம். மோடியை அரசியலில் வளர்த்தெடுத்த ஆசான். ஆனால் ஒரு கட்டத்தில் மோடியின் வளர்ச்சியும் சுதந்திரச் செயல்பாடுகளும் அவருக்குப் பிடிக்காமல் போனது.


தன்னைச் சுற்றிச் சுழன்ற அரசும் கட்சியும் மோடிக்குப் பின்னே போனது அவருக்கு வருத்தமளித்தது போலும். சிலகாலமாகவே சிஷ்யப் பிள்ளையைச் சற்றே கடுந்து பேசிவந்தார் கேசுபாய். தேர்தல் நெருங்கும் வேளையில் நானும் போட்டி போடுவேன் என்றார். பாஜகவில் சீந்துவாரில்லை என்பதால் தம் அல்லக்கைகளை அழைத்துக் கொண்டு தனியே ஒரு கட்சி கண்டார். மோடி எதிர்ப்பாளர் சிலர் சொம்பு கொட்டினர். பழமை போற்றுதும் என்று பேசித் தன் கடந்தகாலச் சாதனைகளைச் சொல்லியிருக்கலாம். ஆனால் தன் சாதிச் சங்கத்திற்குப் போய் நின்று ஓட்டுக் கேட்டார்.  மோடியை வீழ்த்துவேன் என்று சூளுரைத்தார்.


பல தொகுதிகளில் பாஜகவின் ஓட்டு வித்தியாசத்தைக் குறைத்ததும், சில தொகுதிகளில் பாஜக வெற்றி வாய்ப்பைப் பறித்ததும், இரு தொகுதிகளில் வென்றதும் தவிர வேறேதும் பெரிதாகச் சாதிக்க முடியவில்லை. முடிவுகள் வெளியாகி வென்றதும் மோடி இவரைச் சந்தித்து இனிப்பு வழங்கினார். அருளற்ற முகத்துடன் இருந்த கேசுபாய் அவர்கள் பத்திரிகையாளர்களிடம் ”பெரிதாக ஏதுமில்லை, மோடி இனிப்பு கொடுத்தார்,  அது இனிப்பாக இருந்தது” என்பது போலப் பேசிவிட்டுப் போனார்.


மதசார்பின்மை பேசி இந்துமதம் தவிர்த்துப் பிற மதத்தினரை வளைக்க விழையும் பலரும் மோடி மீது வைக்கும் குற்றச்சாட்டு கோத்ரா வன்முறைக்குப் பிந்தைய கலவரத்துக்கு அவர் பொறுப்பு என்பது. கோத்ரா ரயில் எரிப்பு வன்முறை பற்றியும் அதில் கொல்லப்பட்ட 59 கரசேவகர்கள் பற்றியும் யாரும் பேசவில்லை. பாரத அரசியலின் நிரந்தர விதூஷகர் லாலு பிரசாத் யாதவ் கரசேவகர்கள் இசுலாமியருக்கு எதிரான வன்மத்தை வளர்க்கத் தம் ரயில் பெட்டிக்குத் தாமே தீவைத்துக் கொண்டனர் என்ற அளவுக்குப் பேசினார்.


மோடி கடைந்தெடுத்த இந்து வெறியர், குஜராத் அரசாங்கம் செயல்படவில்லை, இசுலாமியர்கள் வேட்டையாடப்பட்டனர் என்றெல்லாம் ஏசுவோர் புளுகைப் புள்ளிவிவரம் என்று நீதிமன்றத்தில் கொடுக்கும் புல்லர்கள் மட்டுமே.

கேசுபாய் படேலின் கட்சி 2 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.  அவர் கட்சியின் 150 வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர். கேசுபாயே  ஒப்புக் கொண்டது போல அவர் தனிக்கட்சி கண்டு களம் புகாதிருந்தால் பாஜக நிச்சயமாக 130-135 தொகுதிகளை வென்றிருக்கும்.  இவரது கட்சி 3.6% வாக்குகளைப் பெற்றது. அது பாஜகவின் வாக்குச் சரிவுக்கு ஒரு காரணாமாக அமைந்தது. மோடியைப் பிடிக்காத பலர் தம்முடன் பேசிக் கொண்டிருப்பதாகவும் அவர்களைக் கொண்டு மோடியை வீழ்த்திவிட முடியும் என்றும் சொல்கிறார் கேசுபாய்.


நாங்கள் கொடுத்த காசை வைத்துத்தான் மோடி வளர்ச்சிப் பணி செய்தார். அதனால் இந்த வளர்ச்சி எங்களதே என்று சோனியா காந்தி வேறு கிச்சுகிச்சு மூட்டினார். ராகுல்காந்தி எல்லாப் புகழும் மோடிக்கே என்பதை ஒப்பமுடியாது. மற்றவர்களுக்கும் பங்கு தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.  இளரத்தம் பாய்ச்சுகிறேன் பேர்வழி என்று காங்கிரசில் பல தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். நரஹரி அமின் என்பவர் மோடியை மோசமான எதிரி என்று கொண்டவர். ஆனால் அவர் மோடியைத் தலைவராக ஏற்றார். காங்கிரசு செய்த உள்குத்துக்களும் கேசுபாய் செய்த சில ஓட்டுப் பிரிக்கும் வேலைகளும் இதில் சற்றே மட்டுப்படுத்தப்பட்டன.


9% இசுலாமியர் ஓட்டு மொத்தமாக விழுந்தால் வசதி என்ற கணக்கில் பலரும் மோடி அமைச்சரவையின் முன்னாள் அமைச்சர்கள் மீதான நீதிமன்றத் திர்ப்பை ஊதிப் பெரிதாக்கி ஊளையிட்டனர். உச்சநீதிமன்றத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து கண்டனம் பெற்ற தீஸ்தா செதல்வாட் ஜாவெத் என்ற அம்மையாரின் வழக்குகளைக் காட்டி மோடி கொலை வெறியர் என்றும் விஷம் கக்கினர். ஆனால் பாட்ஷாக்களின் பாச்சா பலிக்கவில்லை.


வாக்குகளின் புள்ளிவிவரங்களைப் பார்க்கிற போது நகரங்களைவிட புறநகர், கிராமம் மற்றும் எங்கள் கோட்டை என்று காங்கிரசு கொக்கரித்த பழங்குடியினர் பகுதிகள் இவற்றில் பாஜக கொடி உயரப் பறக்கிறது. 2/3 பெரும்பான்மை என்பதை எட்டிப்பிரிக்க இயலவில்லை என்பது போக சென்ற தேர்தலைவிட 2 தொகுதிகளும் 1% வாக்கும் குறைவாகப் பெற்றுள்ளது பாஜக. காங்கிரசு 1% அதிக வாக்கும், கூடுதலாக 2 தொகுதிகளும் பெற்றுள்ளது. 

 
தெற்கு மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் பாஜக வெற்றி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தெற்கு குஜராத்தில் மொத்தம் 35 தொகுதிகள். அவற்றில் 28ஐ பாஜக வென்றுள்ளது. (2007ல்


பாஜகவுக்கு 19 தொகுதிகள்) மத்திய குஜராத்தில் மொத்தம் 61 தொகுதிகளில் 37ல் பாஜக வென்றது (2007ல் பாஜகவுக்கு 30 தொகுதிகள்). இங்கே மீள்வரையறையில் தொகுதிகள்


குறைக்கப்பட்டன. சௌராஷ்ட்ரா பகுதியில் மொத்த 48ல் 30 தொகுதிகளில் வென்றது பாஜக. (2007ல் 38 தொகுதிகள் இங்கேயும் மீள்வரையறையில் தொகுதிகள் குறைக்கப்பட்டன. இங்கே தான் கேசுபாய் படேலில் கட்சி ஓட்டுக்களைப் பிரித்தது.


வடக்கு குஜ்ராத் காங்கிரசை வாழவைத்த பகுதி.  பாஜக இங்கே 15 இடங்களைப் பிடிக்க காங்கிரசு 17 இடங்களைப் பிடித்தது. 2007ல் பாஜக 25 இடங்களும் காங்கிர்சு 7 இடங்களும் பெற்றன. கட்ச் பகுதி பாஜகவுக்கு 5 இடங்களையும் காங்கிரசுக்கு ஒரு இடத்தையும் கொடுத்தது. இது 2007ன் நிலை. அதில் மாற்றமில்லை.


பாஜகவின் சாதகங்கள்:
  • மோடிக்கு இணையான ஒரு தலைவர் பிற கட்சிகளில் இல்லை.
  • வளர்ச்சி என்பதை மட்டுமே பேசி வாகை சூடியிருக்கிறார் மோடி.
  • முன்னேறும் குஜராத் என்பது வெறும் கோஷமல்ல எனும் நிதர்சனம்.
  • பொருளாதார சுதந்திரத்தில் தேசத்தில் குஜராத் முதலிடம் வகிக்கிறது.
  • ரதன் டாட்டா போன்ற ஒரு தொழிலதிபர் மோடியைப் பாராட்டுவது.
  • ஆங்கிலேயர்கள் மோடியோடு உறவாடுவது பெருமை என்று உலகுக்கு அறிவித்தது. (இது உலக நாடுகளின் குஜராத் குறித்த பார்வையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை உண்டாக்கியது.)


பாஜக அரசு செய்ய வேண்டிய பணிகள்:
  • குஜராத்தில் கற்றோர் எண்ணிக்கையில் ஆண்களோடு ஒப்பிடுகையில் பெண்கள் விகிதம் 17% குறைவு, இதை இட்டு நிரப்பவேண்டும்
  • 7-8% பொருளாதார வளர்ச்சி இருந்த போதும் குஜராத்தில் 23% மக்கள் வறுமையில் உள்ளனர் என்பது 2009-10 புள்ளிவிவரம். இதனை மேலும் குறைக்கவேண்டும்.
  • 2004ல் பாஜக இந்தியா ஒளிர்கிறது என்று பேசி தோறபின் ‘இந்தியா வளர்கிறது’ என்று பேசியிருக்கலாமோ என்று துணிந்தபின் எண்ணிய தவறைத் தவிர்க்கவேண்டும்.
  • கிராமம் மற்றும் புறநகர் பகுதிகளில் வளர்ச்சி மற்றும் ஆக்கப்பணிகளில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளவேண்டும்.
  • தமது 4 அமைச்சர்கள் மற்றும் மாநில பாஜ்க தலைவரின் தோல்வி குறித்து ஆய்ந்து கோளாறுகளைச் சரிசெய்யவேண்டும்.
  • வடக்கு குஜராத் வாரிவிட்டது ஏன் என்று தெளிந்து அதைச் சரி செய்யவேண்டும்.
  • வெற்றியை மனதில் மட்டும் கொண்டு தலைக்குச் செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.


சற்றே விளையாடலாம்:

மோடி விளையாட்டு என்பது கரணம் போடும் போட்டி விளையாட்டு. கரணம் உருளும் கரணமாகவோ, கை உன்றிப் போடும் கரணமாகவோ இருக்கும். மதுரை மாவட்டத்தில் தேவாங்குச் செட்டியார் வகுப்புப் பெரியவர்கள் பொங்கலுக்கு மறுநாள் இதனை விளையாடுவர்..

இரண்டு பேர் இரண்டு பக்கம் நிற்பர். ஒருவர் நீறு போடும் பூசாரி. மற்றொருவர் கரணம் போட்டுக்கொண்டு சென்று பொருள்களை எடுத்துவருபவர்.
எடுத்துவருபவர் பக்கத்திலிருந்து அவர்களுக்கு இடையில் கரகம், வாழைத்தண்டு, ஆட்டுக்கால், வாழைப்பழம், முட்டை, உலக்கை, தேங்காய் என்று ஏழு பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும். கரணம் போட்டுக்கொண்டு சென்று ஒவ்வொரு பொருளாக எடுத்துவந்து தன் இடத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் விளையாட்டு.


கரணம் போட்டுக்கொண்டு செல்லும்போது பூசாரி நீறு தூவுவார். கரணம் போடும் வேகத்தில் நீறு தன் மேல் படாவண்ணம் சென்று பொருள்களை எடுத்துவர வேண்டும். நீறு பட்டுவிட்டால் ஆட்டம் அடுத்தவர் கைக்கு மாறும்.

நிற்க! கட்சிக்குள்ளே உள்குத்துக்கள், வாரிவிட்ட வழிகாட்டி, அசந்தால் குருதியைக் குடிக்கக் காத்திருக்கும் எதிரிகள். எப்படியாவது வீழ்த்த எண்ணும் மத்திய காங்கிரசு அரசு, இப்படி பலவித எதிரிகளைச் சமாளித்துக் கரணம் போட்டு வென்று நிற்கும் மோடியின் பெயரை இப்படி ஒரு விளையாட்டுக்கு வைத்த நம் முன்னோர்கள் தீர்க்கதரிசிகளே!

No comments:

Post a Comment